அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!


நமது வீடுகளில் இன்றும் புகழ் பெற்று விளங்கும் பாட்டி வைத்திய முறைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றிருப்போம்.

இது பல வேளைகளில் நமக்கு கைவைத்தியமாக பலனளித்தாலும், அனைத்துமே பாதுகாப்பான வழிமுறைகள் என்று சொல்வதற்கில்லை.

யுவர்ஹெல்த் (Your Health) என்ற இணைய தளத்தில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையின் படி, சில கை வைத்திய வழிமுறைகளை நம் வீடுகளில் தவிர்ப்பது நல்லதாகும். அவை என்னென்ன என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.


மெழுகுவர்த்தியில் காதை சுத்தம் செய்தல்

மெழுகுவர்த்தியின் இரு முனைகளையும் பற்ற வைத்து விட்டு, காதில் உள்ள அழுக்குகளை உறிஞ்சும் முறையை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். எனினும், இதன் மூலம் காதுகள் அடைத்துக் கொள்ளவோ அல்லது தொற்றுகள் ஏற்படவோ அதிக வாய்ப்புகள் உள்ளதால், இது அபாயமான வழிமுறையாகும்.

தீர்வு:
மெழுகுவர்த்தியை எரிப்பதற்குப் பதிலாக காதுகளுக்கான சொட்டு மருந்துகளை பயன்படுத்துமாறு, சொல்கிறார், மௌண்ட் எலிசபெத் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த, டாக்டர்.ஏ.பி.ஜான் என்பவர். இவர் காது, மூக்கு மற்றும் தொண்டை துறையில் மூத்த மருத்துவராவார்.

பருக்களை போக்க டூத் பேஸ்ட்
பல் துலக்குவதற்கு மட்டும், டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாமல், முகப்பருக்களை குணப்படுத்தவும் அதை பயன்படுத்துபவர்கள் உள்ளனர். எனினும், முகப்பருக்களை எரிச்சல் அல்லது அரிப்பின் மூலம் பெரிதுபடுத்தும் குணத்தை தான் டூத் பேஸ்ட் கொண்டுள்ளது என்று அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை!

தீர்வு:
ஸ்பெஷலிஸ்ட் ஸ்கின் சென்டரில் பணியாற்றும் டாக்டர். செயோங் வாய் குவாங் என்ற தோல் மருத்துவ ஆலோசகர், வினிகர் கரைசல் அல்லது உப்பு நீரை பயன்படுத்துங்கள் என்கிறார்.

விரல்களின் மருக்களை வெட்டுதல்
கூரான பொருட்களைக் கொண்டு விரல்களிலுள்ள மருக்களை சில பேர் வெட்டி விட முயற்சி செய்வார்கள். இது தொற்றுக்களை வரவழைக்கும் செயலாகவும், அவருடைய விரலையே வெட்ட வேண்டிய சூழலையும் உருவாக்கிவிடும் என்பது தான், இதிலுள்ள ஆபத்தாகும்.

தீர்வு:
ரத்னம் அலர்ஜி மற்றும் தோல் மையத்தைச் சேர்ந்த டாக்டர்.கே.வி.ரத்னம் என்பவர், படிகக்கல் அல்லது அறுவை சிகிச்சையே சிறந்தது என்று பரிந்துரைக்கிறார்.


தீக்காயங்களில் வெண்ணெய் வைத்தல்
வீடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் பாட்டி வைத்தியங்களில் ஒன்றாக, தீக்காயங்களில் வெண்ணெய் வைக்கும் பழக்கம் உள்ளது. எனினும், தீக்காயங்களில் வெண்ணெய் வைப்பதால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது இங்கு தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

தீர்வு:
உங்களுடைய தீக்காயம் சாதாரணமானதாக இருந்தால், அதில் சற்றே குளிர்ந்த நீரை ஊற்றி சரி செய்ய முயற்சிக்கலாம் என்கிறார் டாக்டர். ரத்னம்.

மீன் முள்ளை கையால் எடுத்தல்
தங்களது தொண்டைகளில் மீன் முள் சிக்கிக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது கைகளிலேயே எடுத்து விட முயற்சிப்பது நாம் காணும் சாதாரண செயலாகும். எனினும், இவ்வாறு செய்வதால் அந்த முள் தொண்டையில் நன்றாக சிக்கிக் கொள்ளவோ அல்லது ஆழமாக சென்று மாட்டிக் கொள்ளவோ செய்யும். இதனால் உங்களுடைய தொண்டை சேதமடைவதுடன், விரல்களின் நகங்களும் தொண்டையை சேதப்படுத்தி விடும்.

தீர்வு:
காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ நிலையத்தின் ஆலோசகரும் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் Y.H.கோ என்பவர், அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுவது தான் பிரச்சனையை முறையாக தீர்க்கும் வழி என்கிறார்.

கண்கட்டிகளை ஊசியில் சரிசெய்ய முயற்சித்தல்
கண்களில் கட்டிகள் வரும் பொது ஊசியைக் கொண்டு அந்த கட்டியை குத்தி, சரிசெய்ய முயற்சிப்பதை நாம் பார்த்திருப்போம். எனினும், இந்த கண் கட்டி கண்ணுக்கு மிகவும் அருகில் இருப்பதால், தவறுதலாக கண்களை குத்திவிடும் வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை…

தீர்வு:
இன்டர்நேஷனல் கண் மருத்துவமனையில் ஆலோசகராக இருக்கும் டாக்டர். குர்ரி சியாங் என்பவர், ஊசிக்குப் பதிலாக, ஆன்டிசெப்டிக் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

குழந்தைகளின் பல் ஈறுகளில் ஆல்கஹால்!
ஆல்கஹாலை பல்வேறு கவலைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தும் மக்கள் (!), குழந்தையின் பல் ஈறுகளில் வலி ஏற்படுவதை நிவாரணம் செய்யவும் அதையே பயன்படுத்துவது தான் ஆச்சரியம்! எனினும், ஆல்கஹாலில் உள்ள எரிச்சலூட்டும் குணம் குழந்தைகளை மிகவும் பாதிக்கும். மேலும், சில வகை ஆல்கஹால்களை குடிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் வாரன் லீ என்பவர் குறிப்பிடுகிறார். இவர் குழந்தைகள் மருத்துவமனையில் பொது மற்றும் குழதைகள் மருத்துவ பிரிவின் தலைவராக இருக்கிறார்.

தீர்வு:
வலியை தாக்குப் பிடிக்கும் வகையில் குழந்தைக்கு எதையாவது கடிப்பதற்கு கொடுக்க வேண்டும் என்கிறார் டாக்டர் லீ.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022