சிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசு திட்டம்


சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.


கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தால், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஓஸன்நெட் எனும் புதிய இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

மாதா அமிர்தானந்த மயியின் 63-ஆவது பிறந்ததினத்தையொட்டி, ஓஸன்நெட் இணையதள வசதி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்து கொண்டு, அதைத் தொடக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது:
புதியனவற்றை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். நாடு முழுவதும் புதியனவற்றை கண்டுபிடிக்கும் மையங்களை உருவாக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் இலட்சியம் ஆகும்.
சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன், அவற்றுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தும். அதேநேரத்தில், சரிவர செயல்படாத பல்கலைக்கழகங்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கும். எனினும், அந்தப் பல்கலைக்கழகங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

புதியன கண்டுபிடிக்கப்படும்போதுதான், ஒரு நாடால் வளர்ச்சியடைய முடியும். எனவே, புதியனவற்றை கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்படுவது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது.
ஓஸன் நெட் போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு தரவேண்டியது எனது கடமை மற்றும் பொறுப்பாகும். இந்த தகவல்தொடர்பு வசதியால், கடலில் மீனவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

நமது கடல்பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கு கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.
நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வியில் அரசியலை புகுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

இதுவொரு தேசிய நலன்சார்ந்த திட்டம் ஆகும். இதில், இடது அல்லது வலது சிந்தனை என்று எதுவும் கிடையாது என்றார் ஜாவடேகர்.
நிகழ்ச்சியில் ஓஸன்நெட் வசதியின் மூலம், அரபிக் கடலில் 60 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருடனும் ஜாவடேகர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022